20 சதவீத போனஸ் வழங்கக்கோரி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

குன்னூர் அருகே 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-24 22:15 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே நான் சச் பகுதியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பெண்கள் உள்பட 500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த தீபாவளியையொட்டி 20 சதவீத போனஸ் வழங்க தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் 8.33 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின்னர் தேயிலை தோட்ட நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே குன்னூர் தொழிலாளர் நல அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனை தொடர்ந்து 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட 41 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. தோட்ட கமிட்டி தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். ஏ.டி.பி. தோட்ட கமிட்டி தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். ஏ.டி.பி. தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் போஜராஜ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஒருசில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். விடுமுறை காலத்திலும் தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து நிர்வாகத்துக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி கொடுத்துள்ளோம். இருப்பினும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி 20 சதவீத போனஸ் வழங்க மறுக்கின்றனர். நாளை(இன்று) கிறிஸ்துமஸ் பண்டிகையை கருப்பு பண்டிகையாக கொண்டாட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்