வாகனம் மோதி தொழிலாளி சாவு: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-25 22:15 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 29). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு விருத்தாச்சலம்- ஆண்டிமடம் சாலையில் ராங்கியம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கோவிந்தசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிந்தசாமி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று முன்தினம் ஒன்று திரண்டு ஆண்டிமடம்- விருத்தாச்சலம் மெயின்ரோட்டில் பெரியாத்தக்குறிச்சி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து நேற்று கோவிந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெரியாத்துக்குறிச்சி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் கோவிந்தசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்க மறுத்து ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலையில் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இது குறித்து, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து கோவிந்தசாமியின் உடலை பெற்றுக்கொண்டு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்