சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது

சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-27 22:45 GMT

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 52). இவருடைய மனைவி ஆனந்தி. இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் புதிதாக கட்டியுள்ள வீட்டில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து, பெண் என்றால் கருக்கலைப்பு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை ஊரகம் மற்றும் சுகாதர நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவினர் ஆனந்தியின் வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆனந்தி அவரது வீட்டில் வைத்து கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன் மற்றும் திருவண்ணாமலை செட்டிகுளம் மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆனந்தியின் வீட்டிற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தி ஏற்கனவே 2 முறை சட்ட விரோத கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இவர் தொடர்ந்து இதுபோன்று சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆனந்தி நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதற்கான நகல் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்