திருச்சியில் பரபரப்பு சம்பவம்: கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்து கைத்துப்பாக்கி திருட்டு - மடிக்கணினியையும் மர்மநபர்கள் தூக்கி சென்றனர்

திருச்சியில் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்து கைத்துப்பாக்கி மற்றும் மடிக்கணினியை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2018-12-28 23:30 GMT
திருச்சி,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கீழ கொற்கை பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் நடையழகன்(வயது 62). இவர் கும்பகோணத்தில் பாரத் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் திருச்சியை சேர்ந்த பிருந்தா(28). இவர் பால்பண்ணையில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கியாஸ் குடோன் அமைப்பதற்காக பிருந்தா, மணிகண்டம் அருகே உள்ள பாகனூரில் இடம் தேர்வு செய்தார். அந்த இடத்தை பார்ப்பதற்காக நடையழகன் தனது காரில் நேற்று திருச்சி வந்தார். அவரும், பிருந்தாவும் காரில் பாகனூரில் சென்று இடத்தை பார்த்தனர். இரவு 7.30 மணிக்கு மேல் பஞ்சப்பூர் மெயின் ரோட்டில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஓட்டலில் காபி குடிக்க இருவரும் சென்றனர்.

இந்த நிலையில் காரின் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு, ஓட்டலில் இருந்து 2 பேரும் விரைந்து வந்தனர். அப்போது காரின் பின்புற பக்கவாட்டு கண்ணாடி உடைந்து இருந்தது. காரில் வைத்திருந்த மடிக்கணினி பையை காணவில்லை. அதில் ஒரு கைத்துப்பாக்கி, மடிக்கணினி, கையடக்க கணினி வைத்திருந்தார். துப்பாக்கியில் ஒரு குண்டும், தனியாக 18 குண்டுகளும் வைத்திருந்தார். அவை அனைத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடையழகன் இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரின் கண்ணாடியை உடைத்து கைத்துப்பாக்கி, மடிக்கணினி, கையடக்க கணினியை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடையழகன் அனுமதி பெற்று தற்காப்புக்காக துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி பிஸ்டல் ரகத்தை சேர்ந்தது என்றும், இத்தாலியில் தயாரானது என்றும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதனை அவர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்