கோவில் சிலைகளை மீட்டு வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்

கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்டு வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கரூரில் நடந்த இந்து விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-12-30 23:00 GMT
கரூர்,

திருச்சி கோட்ட இந்து முன்னணி சார்பில், இந்து விழிப்புணர்வு மாநாடு, கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் கலந்துகொண்டு பேசுகையில், சகிப்புத்தன்மை, பரந்த மனப்பாங்குடன் செயல்படும் இந்துக்களை காவி பயங்கரவாதிகள் என சிலர் கூறி வருவது வருத்தம் அளிக்கிறது. கடந்த காலங்களில் குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தபோது, அதனை இந்துக்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினர். ஆனால் தலாக் என 3 முறை கூறி திருமண முறிவை கடைபிடிப்பதை தடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவிதத்தில் நியாயம்? கடத்தப்பட்ட கோவில் சிலைகளை கண்டுபிடித்து வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது ஆகும், என்றார்.

இந்து பண்பாடு, கலாசாரம், கோவில்களை பாதுகாக்க இந்துக்கள் முன்வர வேண்டும், கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்டு வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், தமிழகத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை, தொழில் கடன் வழங்குதல் போன்றவற்றில் மற்ற மதத்தினரை போலவே சமவாய்ப்பு வழங்க வேண்டும், இந்துக்களை மதமாற்றம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோவில்களில் சிறப்பு கட்டண தரிசனம் என்கிற பெயரில் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, கரூர் நகர தலைவர் காமேஷ்வரன் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்