பெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராமமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் மனு அளித்தனர்.

Update: 2018-12-31 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அருமடல், சறுக்குபாலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். ஆனால் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, தற்போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள அரசாணையின் படி பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தமிழ்நாடு 108 அவரச ஊர்தி(ஆம்புலன்ஸ்) தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு உணவு மற்றும் சிறப்பு பலன்கள் வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஓய்வு எடுக்க மற்றும் மருத்துவ பொருட்கள் வைப்பதற்கு இடம் கழிவறை வசதியுடன் செய்து கொடுக்க வேண்டும்.

3 லட்சம் கிலோ மீட்டருக்கு மேலும் அல்லது 5 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் 108 ஆம்புலன்சுகளை மாற்றித்தர வேண்டும். பெரம்பலூரில் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை திருச்சி கொண்டு செல்ல மேலும் ஒரு ஆம்புலன்சும், செட்டிகுளம் பகுதியில் புதிதாக ஒரு ஆம்புலன்சு வழங்க வேண்டும். 95 சதவீதம் அரசு நிதியில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடன் உதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 307 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள், துறைசார்ந்த அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்