எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்தவதில் சிக்கல் நீடிப்பு; மதுரை ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்

எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவருடைய உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-31 23:31 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த ரத்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் இருந்து தானமாக பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர் தனது சொந்த ஊரில், கடந்த 26–ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் காலையில் திடீரென இறந்தது மீண்டும் இந்த விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவருடைய குடும்பத்தினர், அந்த வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய பிற மாவட்ட அரசு டாக்டர்கள் குழுவை நியமிக்க வேண்டும், பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்“ என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு டாக்டர்கள், அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த வாலிபரின் உறவினர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர். அதன் காரணமாக நேற்றும் அந்த வாலிபரின் பிரேத பரிசோதனை செய்யப்படாததால் இதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்