மழை பொய்த்தது விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ம.தி.மு.க. வலியுறுத்தல்

தமிழகத்தில் மழை இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-01-01 23:00 GMT

பரமக்குடி.

பரமக்குடியில் ம.தி.மு.க. சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சாதிக் அலி தலைமை தாங்கினார். நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் உதயசூரியன், கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது, ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்வது, பொதுச் செயலாளர் வைகோவை அழைத்து தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடத்தி தேர்தல் நிதியாக ரூ.20 லட்சம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் மழை இல்லாமல் மிளகாய், பருத்தி மற்றும் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் குணா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ், பசீர் அகமது, பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரகாசம், கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், கரு.சிங்கராசு, கெவிக்குமார், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் சின்னத்தம்பி, மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் பொறுப்பாளர் பழ.சரவணன் தொகுத்து வழங்கினார். முன்னதாக சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான அடையாள அட்டையினை கணேசமூர்த்தி வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பிச்சைமணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்