புதுச்சேரியில் பரிதாபம்: ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பரிதாப சாவு

புதுச்சேரி கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 9–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-01-02 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை நைனார் மண்டபம் பாரதி நகரை சேர்ந்தவர் சண்முகம். ஓட்டல் ஊழியர். இவருடைய மகன் தன்வந்திரிவாசன் (வயது14). மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மகன் தனுஷ் (14). இவர்கள் இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் 9–ம் வகுப்பு படித்து வந்தனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி மாணவர்கள் தன்வந்திரிவாசன், தனுஷ் மற்றும் இவர்களது நண்பர்களான ராகுல், அசன், லோகபிரகாஷ், சஞ்சீவ் ஆகிய 6 பேரும் நேற்று மதியம் 3 மணியளவில் வம்பாகீரப்பாளையம் பகுதியில் கடலில் குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் தன்வந்திரிவாசன், தனுஷ் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். அவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைப்பார்த்ததும் கடலில் குளித்துக்கொண்டிருந்த அவர்களது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கரைக்கு வந்து அந்த பகுதியில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மீனவர்கள் படகில் சென்று கடலில் மாணவர்களை தேடினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடலுக்குள் இருந்து தன்வந்திரிவாசன், தனுஷ் ஆகிய இருவரையும் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தன்வந்திரிவாசன், தனுஷ் ஆகியோரது உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்