விருத்தாசலத்தில், 1,283 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

விருத்தாசலத்தில் 1,283 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

Update: 2019-01-02 23:53 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை சார்பில் 6 ஒன்றியங்களை சேர்ந்த 1,283 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு, துணை தாசில்தார் முருகன், விருத்தாசலம் சமூக நல அலுவலர் ஜெயபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 1,283 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த தங்கத்தையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு மணமக்கள் நீடூழி வாழ வேண்டும்’ என்றார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பேசும் போது, கம்மாபுரம், விருத்தாசலம், மங்களூர், நல்லூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 1,283 பெண்களுக்கு ரூ.4 கோடியே 73 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 10.264 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் படித்த 611 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 55 ஆயிரமும், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 672 பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 68 லட்சமும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பெண்களின் கல்வி கற்கும் நிலையை ஊக்குவித்து அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் திருமண நிதி உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை பயனாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் அருளழகன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் சந்திரகுமார், மங்கலம்பேட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் பாஸ்கரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தில்ஷாத், ஊர் நல அலுவலர்கள் பானுமதி, விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்