5 படகுகள் எரிந்து நாசம் கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து

கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 படகுகள் எரிந்து நாசமானது.

Update: 2019-01-03 23:15 GMT
கன்னியாகுமரி,


கன்னியாகுமரியில் உள்ள வாவத்துறை கடற்கரை பகுதியில் 100–க்கும் மேற்பட்ட (வள்ளங்கள்) படகுகளை நிறுத்தி வைத்து அப்பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

மேலும் ஒகி புயல், இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த மற்றும் பயன்படுத்தாத 18 படகுகள் கடற்கரை பகுதியில் உள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதே பகுதியில் குப்பைகளும் தேங்கி கிடந்தன.


இந்த நிலையில் நேற்று தேங்கி கிடந்த குப்பைகளில் திடீரென தீப்பற்றியது. அப்போது, அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மள மளவென பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் பற்றி எரிந்தது.

இதனால், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காணப்பட்டது. அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் தீப்பற்றி எரிவதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


இதுபற்றி உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கடல் காற்றின் வேகத்தால் தீ வேகமாக அடுத்தடுத்த படகுகளில் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்தும் தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டது. மேலும், 5–க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 1½ மணிநேரம் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 5 படகுகள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.


தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் 13 படகுகள் தீவிபத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மேலும், அருகில் இருந்த 5 கடைகள், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 100–க்கும் மேற்பட்ட படகுகள் தீவிபத்தில் இருந்து தப்பியது. இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்