பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: சபரிமலை பயணத்தை பாதியில் ரத்து செய்த அய்யப்ப பக்தர்கள்

சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பயணத்தை குமரி பக்தர்கள் பாதியில் ரத்து செய்தனர். மேலும் மாலையை கழற்றி விரதம் முடித்தனர்.

Update: 2019-01-03 23:00 GMT
அஞ்சுகிராமம்,

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 42). தச்சு தொழிலாளி. இவர் பல ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். குருசாமியாக இருந்தும் அய்யப்ப பக்தர்களை சபரிமலைக்கு வழிநடத்தி வருகிறார்.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு சுபாசும், கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த சிவபிரசாத் (32) என்பவரும் சபரிமலைக்கு நடைபயணமாக புறப்பட்டனர். இவர்கள் எரிமேலியை சென்றடைந்த போது சபரிமலை கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த தகவல் அறிந்தனர். இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.

தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல மனம் இல்லாமல் தங்களுடைய பயணத்தை ரத்து செய்து பாதியில் திரும்ப முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலை பஸ் மூலம் அவர்கள் நாகர்கோவில் வந்து சேர்ந்தனர். பின்னர் இருவரும் அஞ்சுகிராமம் அருகே உள்ள பொட்டல்குளம் அய்யன் மலைக்குன்று மீதுள்ள குபேர அய்யப்ப சாமி கோவிலுக்கு சென்றனர்.

அங்கு கோவில் நிர்வாகி தியாகராஜ சுவாமி, அவர்களுக்கு விரதமுறைகளை எடுத்து கூறினார். தொடர்ந்து 2 பேரும் சாமி அய்யப்பனை தரிசனம் செய்து, இரு முடி கட்டு மற்றும் மாலைகளை கழற்றி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

இதுபற்றி குருசாமி சுபாஷ் கூறியதாவது:-

நாங்கள் எரிமேலி பகுதியில் சென்றபோது சபரிமலை ஆச்சாரத்தை மீறி அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. இது எங்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது. விரதமிருந்து சபரிமலைக்கு நாங்கள் சென்ற நிலையில் இதுபோன்ற ஆச்சார மீறல் நடந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் நாங்கள் தொடர்ந்து சபரிமலை செல்ல மனம் இல்லாமல் பாதியில் திரும்ப வந்து எங்கள் விரதத்தை நிறைவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் 2 பேர் தங்களுடைய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்