பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள், பைகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

Update: 2019-01-03 22:45 GMT
கரூர்,

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள், பைகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி பயன்படுத்துவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கரூர் கடைவீதி, ஜவகர் பஜார் ஆகிய இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தாசில்தார் ஈஸ்வரன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஜவுளிக்கடைகளில் ஆய்வு செய்தபோது துணி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது எனவும், பலகார கடையில் தின்பண்டங்களை மூடி வைப்பதற்கு கூட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினர். ஓட்டல்களில் ஆய்வு செய்த அவர்கள், வாழை இலை, பாக்குமரத்தட்டுகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்