சபரிமலை கோவில் விவகாரம்: கேரள அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

சபரிமலை கோவில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில் மறியலுக்கு முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-03 23:00 GMT
திருச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 பெண்களை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்து, இந்துக் களின் மனதை புண்படுத்தி வருவதாக கேரள அரசை கண்டித்து திருச்சி மாவட்ட சபரிமலை அய்யப்ப பக்தர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமை தாங்கினார். திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இளங்குமார் சம்பத், நிர்வாகிகள் புரட்சிகவிதாசன், இல.கண்ணன் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கண்டித்தும், கேரள அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்து மக்கள் கட்சி சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, சபரிமலை கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்தும், அதற்கு அனுமதிஅளித்த கேரள அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். அனுமன்சேனா அமைப்பின் சார்பில் இளைஞரணி தேசிய தலைவர் கங்காதரன் தலைமையில் கேரள அரசை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் தடுத்து நிறுத்தி 4 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கேரள அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், சபரிமலை புனிதம் காக்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில பாரத இந்துமகா சபா சார்பில் நேற்று ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில தலைவர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்