மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதியுதவி முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு

மராட்டிய விவசாயிகளுக்கு பா.ஜனதா அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Update: 2019-01-04 23:00 GMT
மும்பை, 

மராட்டிய விவசாயிகளுக்கு பா.ஜனதா அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதியுதவி செய்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

ரூ.50 ஆயிரம் கோடி

அவுரங்காபாத் மாவட்டம் புலம்பிரியில் அரசு விருந்தினர் மாளிகை, நிர்வாக கட்டிடம் ஆகியவற்றுக்கான கட்டுமான பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழாவில் கூறியதாவது:-

மராட்டியத்தில் எங்களது அரசு பொறுப்பேற்ற 4½ ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி உதவி செய்துள்ளது. ஆனால் முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அவர்களது 15 வருட ஆட்சிகாலத்தில் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.22 ஆயிரம் கோடி வரை மட்டும் நிதியுதவி அளித்தது.

2 லட்சம் விவசாயிகளுக்கு...

மேலும் எனது தலைமையிலான அரசு ஏழை மற்றும் சாமானிய மக்களுக்காக பாடுபட்டு வருவதுடன் மராட்டியத்தில் பல்வேறு நல திட்டங்களையும் வழங்கி வருகிறது. கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கிறது. அதற்கான முடிவுகளை விரைந்து எடுக்கிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது.

மரத்வாடா மண்டலத்தில் எங்களது ஆட்சியில் இதுவரை 2 லட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன மின் மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளின் நீர்ப்பாசனத்துக்கு பெரும் உதவி புரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்