5 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: விவசாயிக்கு ஆயுள் தண்டனை

5 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2019-01-05 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நார்த்தேவன் குடிக்காட்டை சேர்ந்தவர் நாராயணன்(வயது58). விவசாயி. இவர் கடந்த 23-10-2015, மற்றும் 24-10-2015 ஆகிய தேதிகளில் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள், 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுவர், சிறுமிகளை தனது வீட்டின் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலியல் தொல்லைக்கு இணங்க மறுத்த குழந்தைகளை குச்சியால் அடித்தும் துன்புறுத்தி உள்ளார். மேலும் இதை யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு, அவர் களுக்கு பணமும் கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுவர், சிறுமிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள், தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நாராயணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 1 ஆயுள் தண்டனை என 5 ஆயுள் தண்டனையும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜரானார்.

மேலும் செய்திகள்