நங்கநல்லூரில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது மனைவியின் பிரசவத்துக்காக வழிப்பறி செய்ததாக வாக்குமூலம்

நங்கநல்லூரில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மனைவியின் பிரசவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பருடன் சேர்ந்து வழிப்பறி செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2019-01-06 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் ராஜம். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 67). சம்பவத்தன்று இவர், நங்கநல்லூர் ஸ்டேட்பேங் காலனியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி ஜெயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தார்.

பின்னர் மோட்டார்சைக்கிளில் தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்று விட்டார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின்பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து புழுதிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (31) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர்தான் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றதும், மூதாட்டியிடம் சங்கிலியை பறித்தது அவருடைய நண்பரான கோவில்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார்(27) என்பதும் தெரிந்தது.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த கணேஷ்குமாரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசாரிடம் கணேஷ்குமார் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது மனைவி கோவில்பட்டியில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்துதான் பிரசவம் பார்க்க வேண்டியது உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனைவியின் பிரசவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் எனது நண்பருடன் சேர்ந்து மூதாட்டியிடம் வழிப்பறி செய்தேன். அந்த நகையை விற்று ரூ.1 லட்சம் கிடைத்தது. அதில் ரூ. 70 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கோவில்பட்டிக்கு சென்றேன். மனைவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. மேலும் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அதை வாங்க சென்னை வந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்