எதிர்ப்பை மீறி சுண்ணாம்புக்கல் லாரிகள் செல்ல பாதை அமைப்பு ஆய்வு நடத்தியவரின் காலில் விழுந்து பெண் கதறல்

செந்துறை அருகே எதிர்ப்பை மீறி சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்ல பாதை அமைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்யவந்த வக்கீல் காலில் விழுந்து பெண் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-06 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு வெட்டி எடுக்கப்படும் சுண்ணாம்பு கற்களை முன்பு லாரிகள் மூலம் உஞ்சினி கிராமம் மற்றும் நல்லாம்பாளையம் கிராமங்கள் வழியாக கொண்டு செல்லப் பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைச்சேரி கிராம எல்லைக்கு உட்பட்ட நீர் வழி தடம் மற்றும் வண்டிப்பாதை வழியாக சாலை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதே பகுதியில் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி காலை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக கூறி சுண்ணாம்புக்கல் லாரி நிர்வாகம் செந்துறை போலீசார் பாதுகாப்போடு நீர்வரத்து வாரியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கிருந்த அதிகாரிகள் நீதிமன்றம் உத்தரவின்பேரில், அவர்கள் பாதை அமைக்கிறார்கள். இதனை தடுக்கக்கூடாது. நீங்களும் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வாருங்கள் அதற்கிடையே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கூடாது என்று எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அதனை எதிர்த்து விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், நீர் வழித்தடம் மற்றும் விவசாயிகள் பயன் படுத்தும் வண்டி பாதை வழியாக சிமெண்டு ஆலை லாரிகள் செல்ல பாதை அமைத்து விவசாயிகளை அழிக்கின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்றனர். அதனை தொடர்ந்து நீதிபதி, கமிஷன் நியமித்து கள ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவின் பேரில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் வர்ஷா நேற்று பிரச்சினைக்கு உரிய இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் சிமெண்டு ஆலை லாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீர்வழி தடங்களில் அத்துமீறி சிமெண்டு ஆலை நிர்வாகம் பாதை அமைத்து லாரிகள் இயக்க படுவது குறித்து ஆதாரங்கள் உடன் விளக்கம் அளித்தனர். அதனை தொடர்ந்து வக்கீல் வர்ஷா பிரச்சினைக்கு உரிய இடத்தில் நடந்தே சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது விவசாய பெண் ஒருவர் வக்கீலின் காலில் விழுந்து விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதது அப்பகுதியில் இருந்தோரை கண்கலங்க வைத்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்