மாவட்டம் முழுவதும் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வேலூர் மாவட்டத்தில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆம்பூரில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2019-01-06 23:24 GMT
ஆம்பூர்,

தைப்பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்பு, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 ஏலக்காய், ரொக்கப்பரிசு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.மதியழகன், ஆவின் தலைவர் வேலழகன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வரவேற்றார்.

அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில் “தமிழகத்தில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் 1,842 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.113.81 கோடி செலவில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது” என்றார்.

கலெக்டர் ராமன் பேசுகையில், “அரசால் வழங்கப்படும் சிறப்பு பரிசுத்தொகுப்பு ஒரு குடும்ப அட்டைக்கு செலவு ரூ.1,126 ஆகும். மேலும் 7.20 லட்சம் பேருக்கு பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.

80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை இனி அவர்களுக்கு வீடு தேடி வந்து வழங்கும் திட்டமும் வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் அரசு வக்கீல் ஜி.ஏ.டில்லிபாபு, விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன், முன்னாள் நகரசபை தலைவர் லதா உதயகுமார், கூட்டுறவு சங்க தலைவர் கராத்தே கே.மணி, துணை தலைவர் அன்பரசன், பேரணாம்பட்டு நகர செயலாளர் எல்.சீனிவாசன், தேவலாபுரம் வெங்கடேசன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன், அமீன்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்