கேரளாவுக்கு கடத்த கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த, குளச்சல் கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-01-07 23:00 GMT
குளச்சல்,

குமரி மாவட்டத்தில் இருந்து ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பறக்கும் படை அமைத்து தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் குளச்சல் கடலோர பகுதியில் ஒரு வீட்டின் அருகே ரே‌ஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் குளச்சல் கடற்கரை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சிறு, சிறு மூடைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைதொடர்ந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து உடையார்விளையில் உள்ள அரசு உணவுப்பொருள் கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பின்னர், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரே‌ஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அரிசியை அங்கு பதுக்கி வைத்திருந்தது யார்? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்