வடமாநில வியாபாரியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

கோவையில் வடமாநில வியாபாரியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-01-07 23:00 GMT
கோவை, 

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் சுகேல் இந்திரபால் (வயது 29), அமித் குமார். இவர்கள் கோவையில் படுக்கை விரிப்புகளை விற்கும் வியாபாரிகள் ஆவார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி மதியம் 3 மணியளவில் குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கு நின்ற ஒரு நபரிடம் அருகில் ஏதாவது ஓட்டல் இருக்கிறதா? என்று சுகேல் இந்திரபால் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர் ஓட்டலுக்கு நான் அழைத்து செல்கிறேன். பணத்தை என்னிடம் கொடுங்கள் என்று கூறினார். அதற்கு சுகேல் இந்திரபால் பணம் இவரிடம் எதற்கு கொடுக்க வேண்டும். நாமே ஓட்டலை தேடிக் கொள்ளலாம் என்று பக்கத்தில் நின்ற தனது நண்பரிடம் இந்தியில் கூறினார். உடனே அந்த நபர் தன்னை இந்தியில் திட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அருகில் கிடந்த கட்டையை எடுத்து சுகேல் இந்திரபாலை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுகேல் இந்திரபால் கொலை தொடர்பாக குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்த கார்த்திக் ராஜா (23) என்பவரை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புக்கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்புக்கூறினார்.

மேலும் செய்திகள்