வேன்-லாரி மோதிய விபத்தில் இறந்த 10 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை அருகே வேன்-லாரி மோதிய விபத்தில் இறந்த 10 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்தஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-01-07 23:15 GMT
புதுக்கோட்டை,

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், காஜிபேட் கிராமத்தை சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒரு சுற்றுலா வேனில் சென்றனர். வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். அவர் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளவில்லை. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின், தமிழக கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அவர்கள் ராமேசுவரம், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் பகலில் வேனில் புறப்பட்டனர். வேன் நேற்று முன்தினம் மதியம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற ஒரு லாரி அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் நர்சப்பூர் தாலுகாவை சேர்ந்த பிரவீன் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த மகேஸ் (24), குமார் (25), கிருஷ்ணா (31), அய்யனகரி ஷாம் (33), ஆஞ்சநேயலு (26), சுரேஷ் (23), பசத் (26), நாகராஜ் கவுடு (28) ஆகிய 9 பேர் மற்றும் வேன் டிரைவர் என 10 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பூமாகவுடு, ராஜூ, சாய்லமால், வெங்கடேஷ், நரேஷ் ஆகியோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மேல்சிகிச்சைக்காக வெங்கடேஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார் இறந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்களுக்கும், தெலுங்கானா போலீசாருக்கும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து விமானம் மூலம் தாசில்தார் பிக்‌ஷாபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சையலு, மேடக் மாவட்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் முரளிதரயாதவ் மற்றும் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் விமானம் மூலம் திருச்சி வந்து, பின்னர் காரில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து நேற்று காலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திருமயம் அருகே நடைபெற்ற விபத்தில் இறந்த 10 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை, அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபூரி, விருதுநகர், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் 10 இலவச ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 10 வாகனங்களிலும் 10 பேரின் உடல்களை ஏற்றிக்கொண்டு, தெலுங்கானா மாநிலத்தை நோக்கி ஆம்புலன்ஸ் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதில் ஒரு வாகனத்திற்கு 2 டிரைவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர். இதில் டிரைவர்களுக்கான செலவு, டீசல் செலவு உள்பட அனைத்து செலவுகளும் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிரைவர்கள் யாரும் இறந்தவர்களின் உறவினர்களிடம் பணம் கேட்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, திருச்சி, சேலம், பெங்களூரு, ஐதராபாத் வழியாக தெலுங்கானாவிற்கு செல்வதாக டிரைவர்கள் தெரிவித்தனர். இந்த வாகனங்களில் புதுக்கோட்டையில் இருந்து 2 போலீசார் உடன் செல்கின்றனர். இதில் ஒரு போலீஸ்காரர் முதல் வாகனத்திலும், மற்றொரு போலீஸ்காரர் கடைசி வாகனத்திலும் இருப்பார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்