ஓடை ஆக்கிரமிப்பு குறித்து 33 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தர்ணா

ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள ஓடை ஆக்கிரமிப்பு குறித்து 33 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-07 22:45 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில், 5 விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி 33 முறை மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் மழைக்காலத்தில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்து மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்

அதேபோல் நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டுவை சேர்ந்த விவசாயி சுந்தரேஸ்வரனும், தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசாரிடம், அவர் கூறுகையில், எனது தந்தை பெயரில் உள்ள நிலத்துக்கு எனது பெயரில் பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது பெயருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி அழுதார். இதைத் தொடர்ந்து அவரை, குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே செந்துறை அருகேயுள்ள கருத்தநாயக்கன்பட்டி கிராம மக்கள், இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். பலர் சொந்தமாக வீடு இல்லாததால் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். மேலும் சிறிய வீட்டில் 4 குடும்பங்கள் வசிக்கும் நிலை உள்ளது. எனவே, எங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், என்றனர்.

பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த விவசாயிகள், பயிர்க்காப்பீட்டு தொகை கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், கடந்த 2016-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அதேபோல் செவிலியர் பயிற்சி முடித்த பெண்கள் தங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

ரெட்டியார்சத்திரம் கரட்டுபட்டி மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் கொடுத்த மனுவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் தெருத்தெருவாக பாட்டுபாடி கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, தென்னக பார்வையற்றோர் நலச்சங்க மறுவாழ்வு இல்லம் மீண்டும் முறையாக செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்