பெருந்துறையில் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பெருந்துறையில் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-07 23:30 GMT

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் கடந்த 3–ந் தேதி கல்லூரிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர். மேலும் இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நேற்று சரண் அடைந்தார். இதுபற்றி உடனே பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் ராம்பிரபு அங்கு சென்று அந்த மாணவியை மீட்டனர்.

பின்னர் வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நிலக்கோட்டை பர்கானாவை சேர்ந்த மைதீன் குட்டி மகன் முகைதீன் (வயது 22) என்பது தெரியவந்தது.

இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் தங்கியிருந்து போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு பஸ் ஏறுவதற்காக கல்லூரி மாணவி தினமும் வந்து சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை ஊட்டிக்கு கடத்திச்சென்றுள்ளார். மாணவியை தேடுவதை அறிந்து அவருடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மாணவியும், முகைதீனும் மேல் விசாரணைக்காக ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகைதீனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்