கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள் வெறிச்சோடின

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள் வெறிச்சோடின.

Update: 2019-01-08 22:30 GMT

தர்மபுரி,

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பல்வேறு தொழிற்சங்கத்தினர், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுக்கழக ஊழியர்கள் நேற்று முதல் 2–நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், காப்பீட்டு கழக ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 95 வங்கி கிளைகளில் பணிபுரியும் 750–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகளில் பணபரிவர்த்தனை, காசோலைகள் பரிமாற்றம் ஆகியவை பாதிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவைகளும் பாதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் ரூ.500 கோடி மதிப்பில் பணபரிமாற்றம், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் காப்பீடு கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் காப்பீட்டு கழக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கணிசமான அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களும் நேற்று வழக்கம்போல் ஓடின.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் கணிசமானோர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கின.

வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்துதுறை அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்று உள்ளது. இதனால் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்