நீடாமங்கலத்தில் பரபரப்பு: தீயில் கருகி கிடந்த மோட்டார்சைக்கிள் குடும்ப தகராறில் தீ வைத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை

நீடாமங்கலத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று தீயில் கருகி கிடந்தது. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2019-01-08 22:45 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவன்கோவில் அருகே உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நீடாமங்கலம் குளம்தென்கரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வரும் குணசீலன் என்பவரின் மகன் வசந்த் (வயது30) என்பவர் குடும்ப தகராறு காரணமாக தனது மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்தது தெரியவந்தது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தஞ்சை ரெயில்வே போலீசார் நீடாமங்கலத்துக்கு விரைந்து வந்து வசந்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடும்ப தகராறு காரணமாக தனது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்து, அனுப்பினர். மேலும் அவரிடம் இருந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு கடிதம் ஒன்றையும் ரெயில்வே போலீசார் எழுதி வாங்கினர். இந்த சம்பவம் நீடாமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்