நாமக்கல், ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

நாமக்கல், ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-09 23:15 GMT
மோகனூர், 

இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட துணைச் செயலாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் கோரிக்கை குறித்து பேசினார்.

மத்திய, மாநில அரசுகள், அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்க வேண்டும். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க வேண்டும். அரசாணைப்படி அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். மாணவியர், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கமிட்டிகளை அமைத்து, முறையாக கல்வி வளாகங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதே கோரிக்ககைளை வலியுறுத்தி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் சரவணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்