இனயம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

இனயம் அருகே கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 1,500 லிட்டர் மண்எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-01-10 22:45 GMT
அழகியமண்டபம்,

தமிழக ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மானிய விலை மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதை தடுக்க  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் இனயம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு  கார் வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தும்படி செய்கை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், தங்களது வாகனத்தில் சொகுசு காரை விரட்டி சென்றனர். உண்ணாமலைக்கடை பகுதியில் சென்ற போது அதிகாரிகள், சொகுசு காரை மடக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

உடனே அதிகாரிகள், காரை சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கேன்களில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் 1,500 லிட்டர் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிகாரிகள் சொகுசு காரையும், மண்எண்ணெய்யையும் பறிமுதல் செய்தனர்.   

 பின்னர் மண்எண்ணெய்யை இனயம் அரசு கிட்டங்கியிலும், காரை கல்குளம் தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

அதிகாரிகளின் விசாரணையில், இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்