அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தகவல்

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-10 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீத தொகை, இவை இரண்டில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 31 ஆயிரத்து 250 வழங்கப்படும். 125 சிசிக்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த மானியம் பெற, பயனாளிகள் 18 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகன ஓட்டுனர், பழகுனர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளிகள் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வேலை செய்யும் மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்ப தலைவராக கொண்டு குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதிற்கு மேல் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்