அமைதியான சமுதாயத்தை உருவாக்குவதில் தடய அறிவியல் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானது குமாரசாமி பேச்சு

அமைதியான சமுதாயத்தை உருவாக்குவதில் தடய அறிவியல் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானது என்று முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.

Update: 2019-01-11 00:00 GMT
பெங்களூரு,

கர்நாடக போலீஸ் துறை சார்பில் கர்நாடக தடய அறிவியல் ஆய்வு கூடத்தின் பொன் விழா மற்றும் தேசிய மாநாடு பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

தடய அறிவியல் துறை மிக முக்கியமான துறையாக மாறியுள்ளது. இந்த துறையின் தேவை அதிகரித்துள்ளது. இந்த துறைக்கு, குற்ற நீதி முறையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. உலக அளவில் கோர்ட்டு தீர்ப்புகளில் தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

வழக்குகளை விரைவாக...

குற்ற வழக்குகளை தீர்ப்பதில் விசாரணை அதிகாரிகளுக்கு இந்த தடய அறிவியல் அதிகம் உதவி செய்கிறது. அடையாளம் தெரியாத குற்றவாளிகளின் அடையாளங்கள், கைரேகை மற்றும் மரபணு சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

இப்போது இணையதள தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றம் இழைத்தவர்களின் முகங்களை நமக்கு காட்டுகிறது. தடய அறிவியல் துறையில் நவீன தொழில்நுட்பங்களின் வருகை, வழக்குகளை விரைவாக முடிக்க உதவுகிறது.

விஞ்ஞானிகளின் பங்கு

அமைதியான சமுதாயத்தை உருவாக்குவதில் தடய அறிவியல் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானது. தினந்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஆகிறது.

நவீன வசதிகள் கொண்ட தடய அறிவியல் ஆய்வு கூடங்கள் நம்மிடம் உள்ளன. நன்கு கைதேர்ந்த விஞ்ஞானிகள் அதில் பணியாற்றுகிறார்கள். இதன் மூலம் தடய அறிவியல் துறை வளர்ச்சி பெற்று வருகிறது.

தடய அறிவியல் பாடப்பிரிவு

தடய அறிவியல் ஆய்வு கூடத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. சில கல்வி நிறுவனங்கள் தடய அறிவியல் பாடப்பிரிவை தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். நமது நாட்டில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் திறமையை வௌிப்படுத்த வாய்ப்புகளை வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த விழாவில் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், டி.ஜி.பி.நீலமணி ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்