ராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை காரை ஏற்றி கொல்ல முயற்சி - அஜித் ரசிகர் கைது

கூச்சலிட்டுச் சென்றதை தட்டிக் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக அஜித் ரசிகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-10 22:32 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை காண மண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் காரில் வந்துள்ளனர். பின்னர் படம் பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லும் வழியில் மண்டபம் பகுதியை சேர்ந்த முகமதுரியாஸ்கான் (வயது35) உள்பட ரசிகர்கள் கூச்சலிட்டபடி காரில் சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் காரில் சென்றவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று பிடித்து எச்சரிக்கை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ரியாஸ்கான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது காரை மோதி கொலை செய்ய முயன்றாராம்.

இதில் படுகாயத்துடன் உயிர் தப்பிய சப்-இன்ஸ்பெக்டர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து முகமது ரியாஸ்கானை கைது செய்தார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்