சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் படுகாயம்

சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த கண்டக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-01-11 21:30 GMT
சேலம், 

சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை சிவதாபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் ஓட்டினார். கண்டக்டராக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை சேர்ந்த பழனிவேல்(வயது 52) என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் சேலம் அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் பகுதியில் உள்ள வெங்கடப்ப செட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் படிக்கட்டில் கண்டக்டர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது நிலைத்தடுமாறிய பழனிவேல் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக கண்டக்டர் பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வெங்கடப்ப செட்டி சாலையில் வேகத்தடை உயரமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்