தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2019-01-11 22:15 GMT
மோகனூர், 

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே, 43.50 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட தரைவழிப்பாலம் கட்டப்பட்டு கடந்த 2016-ல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. இந்நிலையில் இப்பாலத்தில் 75 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு எல்.இ.டி. பல்புகள் பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வாங்கல் பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 63.80 லட்சம் ரூபாய்.

அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு பாலத்தில் நடைபெற்றது. மோகனூர் - வாங்கல் பாலத்தில் நடந்த விழாவுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இவற்றை தொடங்கி வைத்தனர்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், கீதா, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன், நகர செயலாளர் தங்கமுத்து, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் புரட்சிபாலு, மோகனூர் தாசில்தார் கதிர்வேல், மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, விஜயகுமார் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல்மின்நிலையத்துக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி மார்ச் 2018-ல் முடிந்து விட்டது. அதை புதுப்பிக்க கோரிய நிலையில், சதுப்பு நிலப்பகுதியில் நிலக்கரி சாம்பல் கொட்டக்கூடாது என வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து, அதற்கான சீராய்வு மனுவை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்நிறுவனம் மூலம் பெறப்பட்ட 1,500 மெகாவாட் மின்உற்பத்தி இல்லை என்றாலும் கூட அதற்கு தேவையான மின்சாரத்தை நாங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். ஒரு வாரத்துக்கு தேவையான மின்சாரம் எங்களிடம் இருக்கிறது. அதனால், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மத்திய அரசு நிறுவனம் என்பதால், சாம்பலை அப்புறப்படுத்துவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, முதல்-அமைச்சர் பரிசு அறிவித்திருக்கிறார். அவற்றை ஏற்றுக் கொள்ளமுடியாத எதிர்கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்