தவளக்குப்பத்தில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்களுடன் கேட்பாரற்று நின்ற கார்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களுடன் ரோட்டில் கேட்பாரற்று நின்ற காரை போலீசார் கைப்பற்றி கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

Update: 2019-01-11 22:30 GMT

பாகூர்,

தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் உதவி சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். தவளக்குப்பம்–பூரணாங்குப்பம் ரோட்டில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை திறந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த காரில் பெட்டி–பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. மொத்தம் 592 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

புதுச்சேரியில் மதுபாட்டில்களை வாங்கி அவற்றை தமிழக பகுதிக்கு யாரோ கடத்த முயன்றுள்ளனர். இடையே போலீசாருக்கு பயந்து காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மது பாட்டில்கள் மற்றும் காரை கைப்பற்றிய போலீசார் அவற்றை கலால்துறை வசம் ஒப்படைத்தனர். கலால் துறை அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்