பழைய காகிதம் சேகரிப்பதில் தகராறு, தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் பழைய காகிதம் சேகரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-01-11 22:45 GMT
கோவை,

கோவை உக்கடம் சி.எம்.சி. காலனி பூ மாரியம்மன் கோவில்வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 44). லிங்கப்பசெட்டி வீதியை சேர்ந்தவர் மணி (54). இவர்கள் இருவரும் பழைய காகிதங்களை சேகரித்து விற்கும் தொழில் செய்து வந்தனர். பழைய காகிதங்களை சேகரிப்பதில் அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. இதன் காரணமாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், மணியை தாக்கி உள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி அவர்கள் 2 பேரும் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று மது அருந்தினார்கள். குடிபோதையில் கடையை விட்டு வெளியே வந்தபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மணி, அருகில் கிடந்த கல்லை எடுத்து விக்னேசை சரமாரியாக தாக்கினார் இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே மணி தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த விக்னேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு கோவையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து போலீசார் மணியை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்