திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 27 புதிய பஸ்கள் போக்குவரத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்

கடந்த 7-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 555 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-11 23:06 GMT
திருச்சி,

இதில் 102 பஸ்கள் கும்பகோணம் கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த 102-ல் 27 பஸ்கள் திருச்சி மண்டலத்துக்கு வந்து உள்ளன. இந்த பஸ்களின் போக்குவரத்தை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது. கஜா புயலால் சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாத் தலங்கள் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் பணிகள் முடுக்கி விடப்பட்டு நடைபெற்று வருகின்றன. மிகவிரைவில், பாதிப்படைந்த சுற்றுலாத்தலங்கள் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்றார்.

இந்த புதிய பஸ்கள் திருச்சி- கோவை, திருச்சி - சேலம், திருச்சி- வேளாங்கண்ணி, திருச்சி- கம்பம், திருச்சி- திருப்பூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டல பொது மேலாளர் குணசேகரன் நிருபர்களிடம் கூறுகையில் ‘11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி இரவு வரை திருச்சியில் இருந்து சென்னைக்கு பொங்கல் பண்டிகையையொட்டி 600 பஸ்கள் இயக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்