வேடசந்தூர் அருகே சுற்றுலா பஸ் எரிந்து நாசம் 42 பயணிகள் உயிர் தப்பினர்

வேடசந்தூர் அருகே, சுற்றுலா பஸ் எரிந்து நாசமானது. அதில் பயணம் செய்த 42 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-01-13 23:00 GMT
வேடசந்தூர், 

மராட்டிய மாநிலம் லூத்பூரில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு ஒரு சுற்றுலா பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை லூத்பூரை சேர்ந்த கல்யாண்சிங் (வயது 40) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 42 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலையில் அந்த பஸ் கரூருக்கு வந்தது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. கரூர்-திண்டுக்கல் சாலையில் வந்த போது, பஸ்சின் இடதுபக்க டயர் திடீரென வெடித்தது. இதனை டிரைவர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் டயருடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு சக்கரம் சாலையில் உரசியபடியே வந்தது.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டி வந்தபோது சக்கரத்தில் திடீரென தீப்பற்றியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பஸ்சின் பின்பக்கத்தில் தீ பரவ தொடங்கியது. இதனை பஸ்சுக்கு பின்னால் காரை ஓட்டி வந்தவர் கவனித்தார். உடனே அவர் பஸ்சை முந்திச்சென்று சாலையின் குறுக்காக நிறுத்தினார்.

பின்னர் பஸ் டிரைவரிடம் தீப்பற்றியது குறித்து தெரிவித்தார். அப்போது தான், டிரைவருக்கு பஸ்சில் தீப்பற்றியது தெரியவந்தது. உடனே சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திய டிரைவர், பஸ்சுக்குள் தூங்கிகொண்டிருந்த பயணிகளை எழுப்பி, பஸ் தீப்பற்றியது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து பயணிகள் அலறியடித்தபடி தங்கள் உடைமைகளுடன் பஸ்சில் இருந்து வெளியேறினர்.

இதற்கிடையே தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் பஸ் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகி எலும்புக்கூடானது. அதிகாலையில் ஓடும் பஸ்சில் தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்