ஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-01-13 23:00 GMT
ஓமலூர், 

சேலம் மாவட்டத்தில் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல், மனோன்மணி, ராஜா, சித்ரா, மருதமுத்து, சின்னதம்பி, சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், மாவட்ட ஊர்க்காவல் படை துணை கமாண்டர் பெரியசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தொகுதி வாரியாக அமைக்கப்பட்ட பூத் கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வாறு தேர்தலில் பணியாற்ற வேண்டும், நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

முடிவில், காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் அவர்களுக்கு முதல்-அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமாள், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், பச்சியப்பன், அசோகன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, கூட்டுறவு சங்க தலைவர்கள் துரைராஜ், ராம்ராஜ், பெரியபுதூர் கண்ணன், சி.கர்ணன், நடுப்பட்டி ஊராட்சி செயலாளர் மணி, மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்