திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-13 22:30 GMT

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு வழங்கும் நிவாரண பொருட்களை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சி பள்ளங்கோவிலை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளங்கோவில் கடைத்தெருவில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் பாலு தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்–இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி–மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்