தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெயில்நிலையம் முன் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம்

தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெயில்நிலையம் முன் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-14 23:00 GMT

கோவை,

கோவை ரெயில்நிலையத்துக்கு தினமும் 82 ரெயில்கள் வந்து செல்கின்றன. இதில், 30 ஆயிரம் பயணிகள் பயணிக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக கிடைக்கிறது. இங்கு வரும் பயணிகளின் நலன் கருதி பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தென்னக ரெயில்வேயில் சென்னை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் இருந்தாலும், அடிப்படை வசதி, சுகாதாரம், பயணிகளுக்கான உணவகம், தங்கும் அறை, ரெயில்வே தொழில்நுட்ப பிரிவு, தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் கோவை ரெயில்நிலையம் சிறந்து விளங்கி வருகிறது. இதற்காக இந்த ரெயில்நிலையத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தர சான்றிதழ் விருது (ஐ.எம்.எஸ்.) கிடைத்தது. இந்த விருதுகள் கோவை ரெயில்நிலையத்தில் பயணிகள் செல்லும் பகுதியில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் தற்போது கோவை ரெயில்நிலையத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ரெயில்நிலைய பிரதான நுழைவு வாயில் முன்பு 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவை ரெயில் நிலையம் முன் ரூ.9 லட்சம் செலவில் 100 அடி உயர தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில் நிலையத்தின் வலது புறத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அந்த பள்ளத்தில் கான்கிரீட் அடித்தளத்தில் 100 அடி உயர இரும்புக்கம்பியால் ஆன கொடி கம்பம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் வருகிற 26–ந் தேதி குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தில் தேசியக்கொடியேற்றும் வகையில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் எதிலும் இதுபோல பிரமாண்ட கொடிக்கம்பங்கள் இல்லை. கோவை ரெயில்நிலையத்தில் தான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்