திண்டிவனத்தில் 830 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 830 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.

Update: 2019-01-14 21:41 GMT
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 95 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் திண்டிவனம் பகுதிக்குட்பட்ட படித்த பட்டதாரி மற்றும் 10, 12-ம் வகுப்பு படித்து முடித்த பெண்கள் என ஆக மொத்தம் 830 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் விழுப்புரம் ராஜேந்திரன், ஆரணி செஞ்சி ஏழுமலை, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் லலிதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு திண்டிவனம் பகுதியை சேர்ந்த 830 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காக ஆடு, கறவை மாடு, தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பொங்கல் பரிசு என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அந்த திட்டங்களை அவருடைய வழியில் வந்த இந்த அரசு தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3,730 பேருக்கு ரூ.13 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா வழியில் நடைபெற்று வரும் இந்த அரசுக்கு பெண்கள் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இதில் வானூர் எம்.எல்.ஏ. சக்கரபாணி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், திண்டிவனம் அ.தி.மு.க. நகர செயலாளர் தீனதயாளன், ஒப்பந்ததாரர் குமார், திண்டிவனம் முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் துணைத் தலைவர் முகமது ஷெரீப், மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) கிருஷ்ணமூர்த்தி, (கிழக்கு) எஸ்.பி ராஜேந்திரன், ஒலக்கூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர், ஒலக்கூர் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் தேவநாதன், சக்திவேல், அண்ணா தொழிற்சங்க மின்துறை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்