தோவாளையில் பூக்களை பார்த்து வியந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று ரசித்தனர்

தோவாளைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு கடை கடையாக சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண பூக்களை பார்த்து வியந்தனர்.

Update: 2019-01-14 22:47 GMT
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, ஆவரைக்குளம் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இவற்றை பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பூ வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். மேலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது, பொங்கல் பண்டிகை என்பதால் மார்க்கெட்டில் பூக்களை வாங்க அதிகாலையிலேயே வியாபாரிகள் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் தங்கினார்கள். நேற்று காலை தோவாளை பூ மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு வித விதமான வண்ணங்களில், பல வகையான பூக்கள் குவித்து வைத்திருப்பதை கண்டு வியந்தனர். மேலும் மார்க்கெட்டில் கடை கடையாக சென்று பூக்களை ரசித்தனர். பூக்களின் பெயர், அதைப்பற்றிய விவரங்களை வியாபாரிகளிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அத்துடன் தங்களுக்கு பிடித்தமான பூக்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் செய்திகள்