குலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதல்; வாலிபர் பலி 3 பேர் படுகாயம்

குலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-16 22:00 GMT

குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோப் ஏஜென்சி உரிமையாளர்

குலசேகரன்பட்டினம் கருங்காலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் மகராஜா (வயது 34). இவர் தனியார் சோப் ஏஜென்சி உரிமையாளர். குலசேகரன்பட்டினம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கூடலிங்கம் (27). இவர் குலசேகரன்பட்டினம் பஜாரில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

குலசேகரன்பட்டினம் மேலமரையான் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (21), மேல மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (20). நண்பர்களான இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவில் ஒரு காரில் உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை மகராஜா ஓட்டினார்.

மினி பஸ்–கார் மோதல்

அப்போது மணப்பாட்டில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக உடன்குடிக்கு தனியார் மினி பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோடு, கொட்டங்காடு சந்திப்பு அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மினி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் காரில் இருந்த மகராஜா, கூடலிங்கம், சுந்தர், முத்துராமலிங்கம் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அவர்கள் 4 பேருக்கும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மகராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

படுகாயம் அடைந்த கூடலிங்கம், சுந்தர், முத்துராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து, மினி பஸ் டிரைவரான மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளையைச் சேர்ந்த எட்வர்டு மகன் மற்றொரு முத்துராமலிங்கத்தை (40) கைது செய்தார்.

மேலும் செய்திகள்