தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்

கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ், சாலையோரம் இருந்த மின்கம்பத்தை இடித்து தள்ளியது.

Update: 2019-01-17 22:30 GMT
தாம்பரம்,

சென்னை திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கு நேற்று மதியம் மாநகர பஸ் வந்துகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் விஜயராஜ்(வயது 38) ஓட்டி வந்தார். பஸ்சில் 5 பயணிகள் மட்டும் இருந்தனர்.

கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ், சாலையோரம் இருந்த மின்கம்பத்தை இடித்து தள்ளியது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார், 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதுடன், அங்கிருந்த சிக்னல் கம்பத்தையும் இடித்து தள்ளிவிட்டு மின்வாரிய அலுவலக நுழைவு வாயில் சுவரில் மோதி நின்றது.

இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதி சேதம் அடைந்தது. பஸ்சுக்கு அடியில் சிக்கிய மோட்டார்சைக்கிள்களும் நொறுங்கின. கார், மின்கம்பம், சிக்னல் கம்பமும் சேதமானது. மின்வாரிய அலுவலக நுழைவு வாயில் சுவரும் இடிந்தது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதியில் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்