ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் அன்வர்ராஜா எம்.பி. பேச்சு

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என அன்வர்ராஜா எம்.பி. கூறினார்.

Update: 2019-01-18 22:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நாகூர் களஞ்சியம் தலைமை தாங்கினார். ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மாஸ் சேக் உதுமான், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நசீர் அலி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம், சலாமுல் அன்சர், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பனைக்குளம் நகர செயலாளர் அப்துல் முத்தலிபு வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. கலந்து கொண்டு பனைக்குளம் ஊராட்சியில் பல்வேறு சேவைகளை செய்து வரும் விளையாட்டு வீரர் ஹனீப்கான் என்பவரை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆரால் தான் அ.தி.மு.க. கொடியும், சின்னமும் ஏழை மக்களின் நெஞ்சில் வைத்து போற்றப்படுகிறது. திரைப்படத்தில் வெறும் கதாநாயகனாக மட்டுமின்றி வாழ்க்கையை திரைப்படமாகவும், திரைப்படத்தை வாழ்க்கையாகவும் எண்ணி வாழ்ந்த எம்.ஜி.ஆர்., குற்றம் அழிய வேண்டுமானால் குற்றவாளிகள் ஒழிய வேண்டும் என்ற கருத்தை தன் திரைப்படத்தில் மூலம் சாதாரண மக்களுக்கும் சென்றடைய செய்தார்.

இலங்கை தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் வரை உயிருக்கும் மேலாக நேசிக்கக்கூடிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். தான். இவரது பிறந்த நாள், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி என்பது மக்களுக்கான வங்கி. ஆனால் அது தற்போது பா.ஜ.க.வின் வங்கியாக மாறியிருக்கிறது. அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அடிமை என்று கூறுகின்றனர். இது உண்மையல்ல. நரேந்திரமோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். ஆனாலும் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்டபோது, போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட வேண்டிய இலங்கை அதிபர் ராஜபக்சே அந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்பதால் தான் அவர் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். நாங்கள் காவிரி விவகாரத்தில் பா.ஜ.க.வை எதிர்த்தோம். நாடாளுமன்றத்தை 30 நாட்கள் முடக்கினோம். இதன் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.யை எதிர்த்த ஒரே அரசியல் கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். ஏழைகளின் நம்பிக்கை கட்சி என்றால் அது அ.தி.மு.க. மட்டுமே.

மக்களால் பெரிதும் விருப்பத்துடன் மதிக்கப்பட்ட தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த பின்னரும் அவரது பெயர் இன்னும் அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது. இவர் தான் பிரதமர், அவர்தான் பிரதமர் என்பதை யாரும் அறியமுடியாது. அதனை இறைவன் மட்டுமே அறிவான். என்றும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்