வருமானம் உள்பட 3 வகை சான்றுகளை பெற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

வருமானம் உள்பட 3 வகை சான்றுகளை பெறுவதற்கு செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-18 22:30 GMT
திண்டுக்கல்,

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி, வருமானம், இருப்பிட சான்று ஆகியவை கடந்த 2014-ம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் வழங்கப்பட்டது. தற்போது 20 வகையான சான்றிதழ்கள் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுசேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த மையங்களில் கட்டணம் செலுத்தினால் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்வார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் இணையதளத்தில் இருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள். இந்த நிலையில் 7 வகையான உதவித்தொகைக்கும் பொதுசேவை மையங்களில் விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்களை பெறுவதற்கு,  https://www.tnesevai.tn.gov.in/ citizen/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்து சான்றிதழ்களை பெறலாம்.

இதற்கிடையே  UMANG எனும் செயலி மூலமாக வருமான சான்று, சாதிச்சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் செல்போனை பயன்படுத்தி அந்த செயலி வாயிலாக விண்ணப்பித்து சான்றிதழ்களை பெறலாம் என்று திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்