பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மலைவாழ் மக்கள் அந்தியூர் எம்.எல்.ஏ.விடம் மனு

பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மலைவாழ் மக்கள் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-01-18 23:15 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த ஊசிமலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

நாங்கள் பர்கூர் ஊசிமலை மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த கதிரவன் (வயது 50) என்பவர் 20-க்கும் மேற்பட்ட கேரவன் வைத்துள்ளார். அவர் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

அவருக்கு உதவியாக எங்கள் ஊரை சேர்ந்த கார்த்தி (24), மற்றும் குமார் (28) ஆகியோர் இருந்து வந்தனர்.

கதிரவனுக்கும், அவருடன் இருந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த பெண் தனது அடியாட்களுடன் கதிரவன் வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் கதிரவன் இல்லை.

அவர் இல்லாததால், அங்கு இருந்த கார்த்தி மற்றும் குமாரை போலீசார் உதவியுடன் மிரட்டி, கதிரவன் இருக்கும் இடத்தை கேட்டு துன்புறுத்தினர். பின்னர் அவர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

மேலும் இரவு நேரத்தில் எங்களது வீட்டின் கதவுகளை தட்டி யார் யாரோ விசாரணை நடத்துகிறார்கள். இதனால் மலைவாழ் மக்களாகிய நாங்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளோம்.

எனவே எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுத்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கார்த்தி மற்றும் குமாரை விடுவிக்க வேண்டும். மேலும் நாங்கள் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., ‘இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து ஊசிமலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடமும் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்