பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-01-18 23:07 GMT
நாகர்கோவில்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு மையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பகவதியப்பபிள்ளை, பெனின் தேவகுமார், மாநில செயலாளர் ராஜ்குமார் மற்றும் கனகராஜ், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்