நெல்லையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5,000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 5,000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2019-01-20 22:45 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வரவேற்று பேசினார். அமைச்சர் ராஜலட்சுமி, முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை எடப்பாடி பழனிசாமி வரவேற்றதுடன், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தே.மு.தி.க., காங்கிரஸ் மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்து விலகி தற்போது அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ள வந்துள்ளனர். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, வருகை தருகிறவர்களுக்கு எல்லாம் நிழல் கொடுக்கிற மரம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தில் விசுவாசமாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி தானாக தேடி வரும்.

அதுமட்டுமல்லாமல் ஜனநாயக கட்சி என்றால் அது அ.தி.மு.க. மட்டுமே. மற்றதெல்லம் வாரிசு அடிப்படையில் நடைபெறுகிற கட்சிகள். தி.மு.க. என்றால் கருணாநிதி, அதன்பிறகு ஸ்டாலின், அதைத்தொடர்ந்து உதயநிதி என்று இருக்கிறார்கள். மற்ற எல்லா கட்சிகளிலும் வாரிசுதான் இருப்பார்கள், வாரிசு இல்லாத அரசியலே இல்லை.

ஆனால், அ.தி.மு.க. மட்டும்தான் வாரிசு இல்லாத, ஜனநாயக முறைப்படி நடைபெறும் ஒரே இயக்கம். இங்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். இதில் தங்களை இணைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்த அத்தனை பேரையும் வரவேற்கிறேன். நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, அந்த கட்சியினர் தங்களது குடும்பத்தையும், குடும்ப மக்களையும் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், அ.தி.மு.க. மட்டும்தான் மக்களை பார்க்கும் இயக்கம், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இயக்கம்.

ஆகவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் கண்ட கனவை நனவாக்க பாடுபட்டு வருகிற இயக்கமாகவும், அரசாகவும் இருக்கிறோம் என்பதை கோடிட்டு காட்டுகிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர். ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை சரியான முறையில் அத்தனை மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி தந்துகொண்டு இருக்கிறோம். இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் விளங்கி கொண்டிருக்கிறது.

இதை பொறுக்க முடியாதவர்கள் எரிச்சலுடன் வேண்டுமென்றே திட்டமிட்டு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி 10 நாட்களுக்கு நீடிக்குமா? 6 மாதங்களுக்கு நீடிக்குமா? என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் உங்களுடைய துணையோடு 2 ஆண்டுகள் காலம் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா வழியில் வந்த அரசு தந்து கொண்டிருக்கிறது.

அதனால் அப்படித்தான் அவர்கள் வசைபாடுவார்கள். அவர்களையெல்லம் பொருட்படுத்தாமல் இருபெரும் தலைவர்கள் வழியிலேயே நின்று அவர்கள் செய்த சேவைகளை தொடர்ந்து செய்து நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு என்றென்றும் செய்து கொண்டிருக்கும். தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள அத்தனை நல்ல உள்ளங்களையும் வரவேற்கிறேன், அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆள்உயர மாலை அணிவிக்கப்பட்டு, வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்