தைப்பூச பெருவிழாவையொட்டி திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் பஞ்சரத தேரோட்டம்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2019-01-20 22:45 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 12–ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச பெருவிழா தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத தேரோட்டம் நேற்று நடந்தது. 400 டன் எடை கொண்ட சுவாமி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், அம்பாள் தேர் என 5 பிரமாண்ட தேர்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.


நேற்று காலை தொடங்கிய தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார் இதில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மகாலிங்கசுவாமி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செண்ட மேளமும், பெண்களின் கோலாட்டமும், மங்கள வாத்தியங்களும் முழங்க ஐந்து தேர்களும் அசைந்தாடி சென்ற கண்கொள்ளா காட்சியை பக்தர்கள் பார்த்து மகாலிங்கா... இடைமருதா... ஓம் நமசிவாயா... என பக்தர்கள் பக்தி கோ‌ஷம் எழுப்பி பயபக்தியுடன் வணங்கினர்.


திருவிடைமருதூரில் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து பக்திப்பரவசத்தோடு இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் கோவி செழியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சுந்தரஜெயபால், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் முருகேசன், ரெட்கிராஸ் வி.எம்.பாஸ்கரன், சிம்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் 10–ம் நாளான இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரி‌ஷப வாகனங்களில் வீதியுலாவும், மதியம் காவேரி தைப்பூச படித்துறையில் தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. இரவு வெள்ளி ரத புறப்பாடு நடக்கிறது,

விழா ஏற்பாடுகளை மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை விசாரணை சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர் சுந்தரம் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்